ஜூன் மாத தொடக்கத்திலிருந்தே புதுச்சேரியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 502 ஆக உயர்ந்தது. இதில் 306 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 187 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போல் மாநிலத்தில் இதுவரை 9 நபர்கள் கரோனா தொற்றால் உயிர் இழந்துள்ளனர்.
புதுச்சேரி காலாபட்டு மத்தியச் சிறையில் கரோனா தொற்று காரணமாக 7 கைதிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பணியாளருக்கு கரோனா உறுதியானதால் அவசர அவசரமாக பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. பி.ஆர்.ஓ. அலுவலக பணியாளர்களுக்கும், சம்மந்தப்பட்ட குடும்பத்தினருக்கும் கரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
தினமும் 40 நோயாளிகள் அதிகரிப்பதால் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை இன்று முதல் நிறுத்தப்படுவதாகவும், அங்குள்ள நோயாளிகள் சட்டசபை அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்கள் என்றும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்வதால் ஒருவாரத்தில் அரசு கோவிட் மருத்துவமனையில் படுக்கைகள் இருக்காது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரியில் கோவிட் தொற்றால் 50 பேர் புதிய நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற கோவிட் பாதிப்புகளை அதிகரிக்க அனுமதித்தால் ஒரு நாளைக்கு புதியதாக 100 நபர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பதற்கும் நம்முடைய ஒன்றிணைந்த செயல்பாடுகளால் உழைக்க வேண்டும்.
தயவு செய்து அனைவரும் வெளியே செல்லும் போது முகக் கவசம் அணிய வேண்டும், கடைக்குச் செல்லும் போது சமூக இடைவெளியுடன் செயல்பட வேண்டும். வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கை, கால்களைச் சுத்தம் செய்து கொண்டு பொதுச் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கிருமிநாசினிகளைக் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படித்திக் கொள்ளவும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பைத் தொழிற்சாலைகளின் நிர்வாகத்தினர் உறுதி செய்து கொள்ள வேண்டும். எனவே, தயவு செய்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.