சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 190 நாடுகளுக்குமேல் பரவி, உலக அளவில் அச்சுறுத்தலையும், பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மளிகை கடைகள், காய்கறி கடைகள் ஆகியவை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பலர் ஊரடங்கை மதிக்காமலும் சமூக விலக்கை கடைபிடிக்காமலும் நடந்துகொள்வதால் தமிழகத்தில் சமீபத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் இயங்கும் நேரத்தை குறைத்தது தமிழக அரசு. இதேபோல் புதுச்சேரியில் இனி காய்கறி, மளிகை கடைகள், பெட்ரோல் பங்க்குகள், இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு முன்பு வரை மதியம் 2.30 வரை அத்தியாவசிய கடைகள் செயல்பட்டு வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.