ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25- ஆம் தேதி இயேசு பிறப்பு பெருவிழா கிறிஸ்துமஸ் பண்டியகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அதையொட்டி உலகெங்கும் உள்ள அனைத்து தேவாலயங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நேற்று (24.12.2019) நள்ளிரவிலும், இன்று (25.12.2019) காலையிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி மாநிலத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று (24.12.2019) நள்ளிரவு மற்றும் இன்று (25.12.2019) காலை சிறப்பு திருப்பலி பிரார்த்தனைகள் நடைபெற்றன.
புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரெஞ்சுகாரர்களால் கட்டப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கப்ஸ் தேவாலயத்தில் பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் ஆகிய 3 மொழிகளிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து குழந்தை இயேசுவின் சொருபம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு குடிலில் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதே போல் ரயில் நிலையம் எதிரே உள்ள இருதய ஆண்டவர் பேராலயம், நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், வில்லியனூர் மாதா ஆலயம், அரியாங்குப்பம் மாதா ஆலயம், மிஷன் வீதியில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இவைகளில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அங்கிருந்த மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். கிறிஸ்துவர்கள் ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.