கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வழக்கமாக புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். புதுச்சேரி காந்தி மண்டபம், கடற்கரை, கடற்கரை சாலையில் வெயிலின் தாக்கத்தால் வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் விரும்பி கூடும் இடமாக புதுச்சேரி கடற்கரை சாலை அமைந்துள்ளது. இந்த சாலை சுமார் 1.5 கி.மீ நீளமுள்ள அழகிய கடற்கரையில் கடல் அழகை ரசித்த படியே நடைபயிற்சி செய்வர். கடற்கரையில் குழந்தைகளுடன்அமர்ந்து கொண்டும், விளையாடி கொண்டும் பொழுதை கழிப்பர். ஆனால் இந்த வருட கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால், இந்த ஆண்டு கோடை விடுமுறையை மக்களால் மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை. பகல் நேரங்களில் மக்கள் வெளியில் வருவதற்கு அச்சப்பட்டு, வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் பகல் நேரங்களில் காந்தி திடல் மற்றும் கடற்கரை சாலையில் மக்களின் நடமாட்டமின்றி வாகனங்கள் செல்லும் காட்சியை கூட காண முடியாமல், வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரமும் கடந்தது. விடுமுறையும் வீணே கழிந்தது என்ற நிலை தான். வழக்கமாக விடுமுறை நாட்களில் புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் எதிர்பார்த்த அளவில் இல்லை. ஓரளவு எதிர்ப்பார்ப்புகளுடன் புதுச்சேரி வந்த சுற்றுலாவாசிகளும் தங்கும் விடுதிகளின் அறைகளிலேயே முடங்கி கிடந்துவிட்டு மாலை வேலைகளில் கடற்கரை பக்கம் காற்று வாங்கினர். அது போல் உள்ளூர் வாசிகளும் மாலை வேலைகளில் புழுக்கத்தை போக்க கடற்கரைக்கு காற்று வந்திருந்தனர்.
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை நாள் நேற்றோடு கடைசி என்பதால் கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்களின் கூட்டத்தால் புதுச்சேரி கடற்கரையில் கூட்டம் அதிகம் இருந்தது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என கடல் அலைகளோடு விளையாடி மகிழ்ந்தனர். வெயிலின் தாக்கம் கொஞ்சம் குறைவாக இருந்திருந்தால், இந்த கோடை விடுமுறை கொண்டாட்டமாக இருந்திருக்குமே… என்னும் ஏக்கம் பெற்றோர்களிடமும், குழந்தைகளிடமும் இருந்ததை காண முடிந்தது.