புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், வேட்பாளர்களும் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரித்து வருகின்றனர். இதனால் புதுச்சேரி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்பமொய்லி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி அளித்துள்ள வாக்குறுதிகள் பின்வருமாறு; "10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். காரைக்கால் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து; மீனவர்களின் ஓய்வூதியம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கப்படும்" உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணிக்கும், காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.