புதுச்சேரி அரசின் நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத சூழலில், அம்மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரைக்கு பின் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவையில் இந்தாண்டுக்கான முழுமையான முதல் கூட்டம் என்பதால், துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றினார். புதுச்சேரியில் தனிநபர் வருமானம் அதிகரித்திருப்பதாகக் கூறிய அவர், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதியில் 94% செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றினார். கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்திருந்த தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் உரை தொடங்கியதும் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரிக்கு தேவையான நிதி கிடைக்கவும், மாநில அந்தஸ்து கிடைக்கவும் நடவடிக்கை எடுக்காமல் மாநில வளர்ச்சிக்கு தடையாக அரசியல் செய்து கொண்டிருப்பதாக ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மீது அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனிடையே, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி சபாநாயகர் அறிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் என்ற போதிலும், பட்ஜெட்டிற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததே பேரவை ஒத்திவைக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.