நாடு முழுவதும் பள்ளி பொதுத் தேர்வுகள் ஆங்காங்கே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஹரியானாவில் பள்ளி ஒன்றில் உள்ளே தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு சிலர் பிட்டு சீட்டுகளை ஜன்னல் வழியாக கொடுக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது.
ஹரியானாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏராளமானோர் ஜன்னல்கள் வழியாக பிட் அடிப்பதற்காக துண்டு சீட்டுகளை வழங்கும் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிறது. உயிரை பணயம் வைத்து கயிற்றில் தொங்கியபடி ஜன்னல்கள் மீது ஏறி பிட் சீட்டுகளை கொடுக்கும் இந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதன்கிழமை வெளியான இந்த வீடியோ ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் சந்திரவதி என்னும் பள்ளியில் பொதுத்தேர்வு நடந்த போது எடுக்கப்பட்ட காட்சிகள் என்று கூறப்படுகிறது. தேர்வு தொடங்கிய சிறிது நேரத்திலேயே வினாத்தாள்கள் கசிந்தது. சில மாணவர்கள் வினாத்தாளை புகைப்படம் எடுத்து, அதனை உறவினர்களுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. உறவினர்கள் வினாத்தாளின் அடிப்படையில் விடைகளை துண்டு சீட்டுகளில் சேகரித்து அவர்களுக்கு கொடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
இதேபோன்று 2015 ஆம் ஆண்டு பீஹாரில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் போது ஒரு பள்ளியின் சுவற்றில் மாணவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் மாணவர்கள் காப்பி அடிக்க பிட்டு சீட்டுகளை, பள்ளியின் ஜன்னல் வழியே உதவிய வீடியோ வைரலானது. அப்போது பேட்டி அளித்த பீஹார் கல்வித்துறை அமைச்சர் பி.கே.சஹி, காப்பியடிக்காமல் தேர்வு எழுதுவது என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒத்துழைப்பின்றி, அரசாங்கத்தால் மட்டும் சாத்தியமாக்க முடியாது என்றும், நேர்மையாக தேர்வெழுதுவது மாணவர்களுடைய கடமை என்றும் கூறினார். அதற்கு கண்டனம் தெரிவித்த பாட்னா உயர்நீதிமன்றம், கல்வி அமைச்சரின் கருத்து வெட்கக்கேடானது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.