கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு எனக் கருதப்படும் நிலையில், இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்த தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், பல்வேறு மாநிலங்கள் சார்பில் தடுப்பூசியை இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஆனால் ஃபைசர், மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசி நிறுவனங்கள் மாநிலங்களுக்குத் தடுப்பூசி வழங்க மறுத்துள்ளன. மத்திய அரசுடன் மட்டுமே தடுப்பூசி வர்த்தகம் மேற்கொள்வோம் எனவும் அந்நிறுவனங்கள் கூறியுள்ளன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், தடுப்பூசி வழங்குவது மத்திய அரசின் கடமையென்றும், மத்திய அரசு தடுப்பூசி வழங்குவதைத் தாமதப்படுத்தினால் இன்னும் எத்தனை உயிர்கள் போகுமெனத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் "டெல்லியில் தடுப்பூசிகள் இல்லை. நான்கு நாட்களாக 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. இங்கே மட்டுமல்ல, இந்தியா முழுவதும், பல மையங்கள் மூடப்பட்டுள்ளன. நாம் இன்று புதிய தடுப்பூசி மையங்களைத் திறந்திருக்க வேண்டும், ஆனால் ஏற்கனவே இருக்கும் தடுப்பூசி மையங்களை மூடுகிறோம். இது நல்லதல்ல. எனக்கு தெரிந்தவரையில், எந்தவொரு மாநில அரசாலும் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசியைக் கூட வாங்க முடியவில்லை. தடுப்பூசி நிறுவனங்கள் மாநில அரசுகளுடன் பேச மறுத்துள்ளன.இது மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டிய நேரம். தனித்தனியாக வேலை செய்யும் நேரமல்ல. நாம் இந்திய அணியாக பணியாற்ற வேண்டும். தடுப்பூசி வழங்குவது மத்திய அரசின் பொறுப்பு. மாநிலங்களின் பொறுப்பு அல்ல. நாம் தடுப்பூசி வழங்குவதை இன்னும் தாமதப்படுத்தினால், இன்னும் எத்தனை உயிர்கள் போகும் எனத் தெரியாது" எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், "இந்த நாடு ஏன் தடுப்பூசிகளை வாங்கவில்லை? இதை நாம் மாநிலங்களிடம் விட்டுவிட முடியாது. கரோனாவிற்கு எதிரான போரில் நம் நாடு உள்ளது. பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கினால் அதனைச் சொந்தமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என மாநிலங்களிடம் விட்டுவிடுவோமா? உத்தரப்பிரதேசம் சொந்தமாக டேங்கர்களை வாங்குமா?அல்லது டெல்லி சொந்தமாக ஆயுதங்களை வாங்குமா?" எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.