கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே.சிவகுமார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடுகள் என 84 இடங்களில் கடந்த 2017ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை செய்தது. அப்போது அவர் வீட்டிலிருந்து 8.59 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். 8.59 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக நேற்று அமலாக்கத்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகா முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் பெங்களுருவில் இன்று நடந்த போராட்டத்தில் திடீர் வன்முறை வெடித்தது. பல இடங்களில் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன, வாகனங்கள் தீவைக்கப்பட்டன. போலீசார் போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர்.