அசாமின் திப்ருகார் மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளர் தனது மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 1 ஆம் தேதி காலை பா.ஜ.க.வின் திப்ருகார் பொதுச் செயலாளரான நயன் தாஸின் மனைவி உடல் வென்டிலேட்டரில் இருந்து தூக்கிட்டுக் கொண்ட நிலையில் அவரது வீட்டில் கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உள்ளூர் பெண்கள் அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் திப்ருகார் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 306 -இன் கீழ் நயன் தாஸ் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து நடைபெற்ற விசாரணைகளின் அடிப்படையில் மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக நயன் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தம்பதியினருக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆன நிலையில், நான்கு வயது மகள் ஒருவர் உள்ளார். நயன் தாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக திப்ருகார் பா.ஜ.க. அறிவித்துள்ளது. இதையடுத்து ஞாயிற்றுக் கிழமை மாலை கைது செய்யப்பட்ட நயன் தாஸ், நீதிமன்றத்தால் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.