தனியார் பயணிகள் ரயில் சேவையைத் தொடங்கும் விதமாக, தனியார் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பம் கோரியுள்ளது மத்திய ரயில்வே அமைச்சகம்.
ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் சமீபகாலமாக வகுத்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே கடந்த ஆண்டு ஐ.ஆர்.சி.டி.சி.-க்கு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதியளித்தது. அதன்படி, தேஜாஸ் விரைவுவண்டி, தி காசி மகால் எக்ஸ்பிரஸ், போன்ற ரயில்கள் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக 109 வழித்தடங்களில், 151 நவீன ரயில்கள் தனியார் மூலம் இயக்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியுள்ள தனியார் நிறுவனங்கள் மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அதிவேக தனியார் பயணிகள் ரயில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் நவீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வரவும், பராமரிப்பு செலவைக் குறைத்து வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவுமே இந்தத் திட்டம் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், சேவை மற்றும் ரயிலைப் பராமரித்தல் மட்டுமே தனியார் நிறுவனத்தின் பணி என்றும், ரயிலை இயக்குபவர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ரயில்வே துறை மூலமே நியமிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் ரயில்களை இயக்குவதற்காக அதானி போர்ட்ஸ், மேக் மை ட்ரிப், இண்டிகோ ஏர்லைன்ஸ், விஸ்தாரா, ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.