
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (22.04.2025) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை, இந்திய ராணுவப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது. மேலும், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது இந்திய ராணுவப் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தாக்குதல் நடத்திய ஒவ்வொரு பயங்கரவாதிகளும் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகையில், “இந்த பீகார் மண்ணில் இருந்து கொண்டு இந்த உலகிற்கு நான் சொல்கிறேன். பஹல்காமில் தாக்குதல் நடத்திய ஒவ்வொரு பயங்கரவாதிகளையும், அவரது ஆதரவாளர்களையும் இந்தியா கண்டுபிடித்து தண்டிக்கும். இந்த பூமியின் எல்லை வரை நாங்கள் அவர்களை பின் தொடர்வோம். பயங்கரவாதத்தால் இந்தியா ஒரு போதும் உடையாது. பயங்கரவாதிகள் தண்டிக்கப்படாமல் போகமாட்டார்கள்.
இந்த தாக்குதலில் உயிரிழந்த அனைத்து அப்பாவிகளுக்கு உரிய நீதியை கொடுக்கும் அனைத்து முயற்சியையும் இந்தியா மேற்கொள்ளும். நினைத்து பார்த்திராத வகையில் பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவார்கள். இந்த உறுதியில் ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டுள்ளது. மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் உள்ளனர். தண்டனை குறிப்பிடத்தக்கதாகவும் கடுமையானதாகவும் இருக்கும், இந்த பயங்கரவாதிகள் இதைப் பற்றி ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள். எங்களுடன் துணை நின்ற வெளிநாட்டுத் தலைவர்களுக்கும், மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்தார்.