பருவ மழை தொடங்கி கடந்த 4 நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இதில் அம்மாநில தலைநகரான மும்பை நீருக்குள் மூழ்கி தத்தளித்து வருகிறது. கடந்த 4 நாட்களில் 400 செ.மீ மழை பெய்துள்ள நிலையில், நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகளுக்கும் மழைநீர் புகுந்ததையடுத்து அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் முடங்கியுள்ளன.
மும்பை புறநகர் பகுதியான மாலட் பகுதியில் நேற்று சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியான நிலையில், புனேவில் கல்வி நிறுவனத்தின் சுவர் இடிந்ததில் 6 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 19 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை சர்வதேச விமானநிலையமும் நீரில் மூழ்கி இருப்பதால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, இதுவரை 54 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் பல இடங்கள் நீர் சூழ்ந்து இருப்பதால் மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.