
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (22.04.2025) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 17 பேர் காயமடைந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மன்றம் மற்றும் பாஜக உறுப்பினர்கள் இன்று (24.04.2025) போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், "டெல்லியில் உள்ள பாஜக இன்று இந்தியாவின் 140 கோடி மக்களின் இதயங்களில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. நாங்கள் பிரதமர் மோடியுடன் துணை நிற்பதாக உறுதியளிக்கிறோம். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக பாகிஸ்தானை அறிவிக்க வேண்டும் என்பது ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்திடம் இருந்து நாங்கள் கோருகிறோம்” எனத் தெரிவித்தார்.
அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி (CWC) கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எம்.பி., காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தலைவர் சோனியா காந்தி எம்.பி., மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.