பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் நடைபெற்ற முதல் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்கு தனியாக ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முதல் 3 வருடத்தில் 5 கோடி விவசாயிகளை இந்த திட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 10,774.5 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அனைத்து மாநில வேளாண் அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர், அனைத்து மாநிலங்களும் இந்த திட்டத்தை விரைவாக தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்காக 18 முதல் 40 வயதுடைய தகுதியுள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் பட்டியலை சேகரிக்கும் பணிகளை உடனே தொடங்கவும் உத்தரவிட்டார். இந்த திட்டம் பற்றி விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தை எல்.ஐ.சி. நிறுவனம் செயல்படுத்துகிறது. விவசாயிகள் 29 வயதை அடைந்ததில் இருந்து தங்கள் பங்களிப்பாக மாதந்தோறும் ரூ.100 செலுத்த வேண்டும். மத்திய அரசும் அதே பங்கு தொகையை ஓய்வூதிய திட்டத்தில் செலுத்தும். விவசாயிகள் 60 வயதை அடைந்ததும் குறைந்தபட்சமாக மாதந்தோறும் அவர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். விவசாயிகள் இந்த தொகையை ரூபாய் 100 பிரதமர் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் கீழ் பெறும் பணத்தில் (ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம்) இருந்தும் நேரடியாக செலுத்தலாம். இந்த திட்டம் வெளிப்படையாக நடைபெறுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.