இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்துக் கேள்விகள் எழுப்பியும், பிரதமர் கலந்துகொண்டு விவாதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவைகள் முடங்கியுள்ளன.
அதேபோல், தேசிய அளவில் பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணி அமைத்துள்ளன. அந்தக் கூட்டணிக்கு ‘இந்தியா’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்தே பாஜக தரப்பில் இருந்து இந்தியா எனும் பெயர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று பாஜக எம்.பிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா எனும் பெயரை மோடி மறைமுகமாக விமர்சித்திருந்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய மோடி, “இந்தியத் தேசிய காங்கிரஸ், நாட்டை அடிமைப்படுத்திய கிழக்கு இந்தியக் கம்பெனி, பயங்கரவாத அமைப்பான இந்தியன் முஜாய்தீன், தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்பனவற்றில் இந்தியா எனும் பெயர் உள்ளது. பெயரில் இந்தியா என்ற வார்த்தையைக் கொண்டு வருவதால் எதுவும் நடக்காது. மக்கள் ஒரு போதும் தவறாக வழிநடத்தப்படமாட்டார்கள்” என்று தெரிவித்ததாக ரமேஷ் பிதுரி எம்.பி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இன்றைய அமர்விலும் மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின. காலை அமர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இரண்டாம் அமர்வு இன்று (25 ஆம் தேதி) நண்பகல் நேரத்தில் கூடியது. அப்போது கேள்வி நேரத்தின் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மணிப்பூர்.. மணிப்பூர் என்ற கோஷங்களை எழுப்பினர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டவர்கள் அவையில் மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேசும்போதும் மைக் அணைக்கப்பட்டது. இதனால், எதிர்க்கட்சிகள் இதைக் கண்டித்து அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “பா.ஜ.க எம்.பி.க்கள் கார்கேவை பேசவிடாமல் தடுத்தனர். கார்கே, மணிப்பூர் குறித்துச் சபையில் பேசுவதற்கும் இந்தியாவின் கோரிக்கையை வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அவையில் மசோதாக்களை நிறைவேற்றப் பிடிவாதமாக இருந்தார்கள். சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் குறுக்கிட்டார். இறுதியில் அவர்களது மைக் அணைக்கப்பட்டது. இதனால், இந்தியா அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பிரதமர் மோடி சபையில் இல்லாதது குறித்து மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். மேலும், மணிப்பூர் விவகாரம் குறித்து விதி எண் 267-ன் கீழ் விவாதிக்க 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால், அதை ஏற்க மத்திய அரசு தயாராக இல்லை. இத்தனை பேர் மணிப்பூர் பிரச்சனை குறித்துப் பேச விரும்பும்போது, அவர்கள் ஏன் பேசத் தயாராக இல்லை. ஏன் மோடி இங்கு வந்து நிலைமையை விளக்கவில்லை. வெளியே அவர் கிழக்கிந்திய நிறுவனத்தைப் பற்றிப் பேசுகிறார். ஆனால், அவர் சபைக்கு வந்து மணிப்பூர் பிரச்சனை குறித்துப் பேசத் தயாராக இல்லை” என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமர் மோடி இந்தியக் கூட்டணியைக் கடுமையாகச் சாடி வருகிறார். ஆனால், இந்த இந்தியா கிழக்கிந்திய கம்பெனியைத் தோற்கடித்தது. இந்தியன் முஜாகிதீனையும் இந்த இந்தியா தோற்கடித்தது. மணிப்பூரில் நடக்கும் கொடூரமான வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் எப்போது அறிக்கை அளிப்பீர்கள்? மணிப்பூர் மக்களின் காயங்களை ஆற்றி அங்கு அமைதி எப்போது திரும்பும்? எதிர்க்கட்சிகள் நாட்டிற்கு வழிகாட்டியாக இருக்கிறது. பிரதமரோ திசை தெரியாமல் இருக்கிறார்” என்று கூறினார்.