"இந்திய இசை அதன் மிக மெல்லிய குரல்களில் ஒன்றை இழந்துள்ளது" என எஸ்.பி.பி குறித்து குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு உயிரிழந்தார். எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். மேலும், இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் அவர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இசை ஜாம்பவான் எஸ்.பி.பி நம்மை பிரிந்த இந்நேரத்தில் இந்திய இசை அதன் மிக மெல்லிய குரல்களில் ஒன்றை இழந்துள்ளது. அவரது எண்ணற்ற ரசிகர்களால் 'பாடும் நிலா' என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பி., பத்ம பூஷண் மற்றும் பல தேசிய விருதுகளைப் பெற்றவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அபிமானிகளுக்கும் எனது இரங்கல்" என்று தெரிவித்துள்ளார்.