இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் நாட்டின் 16- வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் (18/07/2022) நடைபெற்றது.
இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு, தி.மு.க., காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் களம் கண்டுள்ளனர்.
இந்த நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் சுற்று நிறைவில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திரௌபதி முர்மு 4,83,299 மதிப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, இரண்டாம் சுற்றின் முடிவில் 1,89,876 மதிப்பு வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். சுமார் 2,93,423 மதிப்பு வாக்குகள் வித்தியாசத்தில் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
திரௌபதி முர்மு 1,349 வாக்குகளையும், யஷ்வந்த் சின்ஹா 537 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
வாக்கு வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.