Skip to main content

“பிரக்யான் ரோவர் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது” - இஸ்ரோ

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

Pragyan rover successfully completes mission ISRO

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட்  23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது.

 

இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வந்தது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றியும் பரிசோதித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும் பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களைக் கண்காணித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் ரோவர் செயல்பாடு குறித்து இஸ்ரோ தெரிவிக்கையில், “நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் மூலம் தரையிரங்கிய பிரக்யான் ரோவர் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. பிரக்யான் ரோவர், தனது பணிகளை நிறைவு செய்துவிட்டு, பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் முறைக்கு (sleep mode) மாற்றப்பட்டுள்ளது. பிரக்யான் ரோவரில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. நிலவில் மேற்கொண்ட ஆய்வின் தரவுகளை விக்ரம் லேண்டர் மூலமாக பூமிக்கு அனுப்பியுள்ளது. அடுத்த சூரிய உதயமாகும் செப்டம்பர் 22 ஆம் தேதி ஒளியை பெரும் வகையில் சோலார் பேனல்கள் ஆயத்தமாக்கப்பட்டு, மீண்டும் பணியை தொடங்க வாய்ப்புள்ளது. ஒரு வேளை சூரிய ஒளி படாத பட்சத்தில் இந்தியாவின் நிரந்தர தூதராக நிலவில் பிரக்யான் ரோவர் ஆழ்ந்த நித்திரை கொள்ளும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்