ஆந்திராவில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான கோயிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னப்பிரசாதத்தில் பூரான் கிடந்ததாக மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது. திருப்பதியில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 2ல் மாதவ நிலையத்தில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு ஒரு பக்தருக்கு வழங்கப்பட்ட அன்னப்பிரசாதத்தில் பூரான் இறந்து கிடந்ததாக செய்தி ஒன்று பரவியது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விமர்சனத்தை பெற்று வந்தது.
இது விவகாரம் தொடர்பாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில், தேவஸ்தான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘பிரசாதத்தில் பூரான் இருந்ததாக பக்தர்களின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம், அதிக அளவில் சூடாக அன்ன பிரசாதத்தை தயார் செய்கிறது. அந்த சூட்டிலும், பூரான் இருந்ததாக பக்தர்கள் குறிப்பிட்டது ஆச்சரியமாக உள்ளது. பக்தர்கள் இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும் பொய்யான செய்திகளை செல்ல வேண்டாம். ஸ்ரீ வெங்கடேஸ்வரா மற்றும் திருப்பதி தேவஸ்தானம் மீதுள்ள நம்பிக்கையைப் பேணுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.