புதுச்சேரியில் ஆளுநர் தலையீட்டை தடுக்க மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை விடுத்திருந்தார். அந்த அறிக்கையில், 'பாஜகவின் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் புதுச்சேரி பட்ஜெட்டிற்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.
புதுச்சேரி சட்டமன்றத்திற்கே நிபந்தனை விதிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் கண்ணியத்தை முற்றிலும் சீர்குலைக்கும் மிக மோசமான அரசியல் சட்ட விரோதச் செயலாகும். பாஜகவில் உள்ள மூன்று பேரின் தனிமனித நலனுக்காக, புதுச்சேரி வாழ் ஏழரை லட்சம் மக்களின் பொது நலனை முடக்கி வைத்த துணை நிலை ஆளுநருக்கு அந்தப் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதி இருக்கிறதா? என்பதை மத்தியில் உள்ள பாஜக அரசு மதிப்பீடு செய்ய வேண்டும். இதுபோன்று திட்டமிட்டு உருவாக்கிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் வளர்ச்சித் திட்டங்கள் அதிகாரக் குழப்பங்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும் உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து தி.மு.க ஆட்சியில் இருந்தபோது தனி மாநில அந்தஸ்து கோராத நிலையில் தற்போது நாடகம் ஆடுவதாக அதிமுக குற்றசாட்டியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் செய்தியாளர்களிடம், "மத்தியிலும் மாநிலத்திலும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து பெறுவது சம்பந்தமாக எந்தவொறு சிறு நடவடிக்கையும் திமுக எடுத்தது இல்லை. தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலைக்கு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்கின்ற நிலையை அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் எடுத்து வருகின்றது.
இதில் ஆளும் அரசு ஒரு நிலைபாட்டை எடுத்து வரும் சூழ்நிலையில் சட்டமன்றத்தில் நடைபெற்ற தனிநபர் தீர்மானங்களின் உண்மை நிலையை மூடி மறைத்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மக்களிடையே ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்துகின்ற விதத்தில் மாநில அந்தஸ்து சம்பந்தமாக அக்கறை கொண்ட கட்சியாக திமுக இருப்பது போன்ற தவறான தகவலை தெரிவத்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற மத்திய அரசை ஒருபோதும் வற்புறுத்தியது இல்லை" என்று கூறியுள்ளார்.
எந்த விவகாரத்திலும் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருப்பதில்லை என்பதையே அ.தி.மு.கவின் போட்டா போட்டி பேட்டி உணர்த்துவதாக புலம்புகின்றனர் புதுச்சேரிவாசிகள்.