மீன்வளத்துறையில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் மகேந்திர குமார் துபே. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜஸ்தானில், சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள சன்வாரிய சேத் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது, மகேந்திர குமார் துபேவின் காலணிகள் காணவில்லை. இதையடுத்து மன்சாஃபியா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் இது குறித்து வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினர். ஆனால் இந்த வழக்கு நாளடைவில் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் தான் சமீபத்தில் அதே கோவிலில் இருந்து நீதிபதி மகனின் காலணியும் திருடப்பட்டுள்ளது என்ற தகவல் செய்தித் தாளில் வந்துள்ளது. இதனைப் பார்த்த மகேந்திர துபே, ஏழு ஆண்டுகளுக்கு முன் நடந்த தனது காலணி திருட்டு தொடர்பான பழைய வழக்கின் விண்ணப்பத்தை இணைத்து காவல் நிலையத்திற்குப் புதிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மகேந்திர துபேக்கு, மன்சாஃபியா காவல் நிலையத்திலிருந்து தொலைப்பேசியில் அழைப்பு வந்துள்ளது. அதில் கோவில் வளாகத்தில் இருந்து திருடப்பட்ட சில காலணிகள் மீட்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் காலணி எது என்று நீங்களே வந்து கண்டுபிடித்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.