உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள நான்கு கட்டத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேச தேர்தல் இந்துக்களைப் பற்றியதோ, முஸ்லீம்களைப் பற்றியதோ இல்லை எனத் தெரிவித்துள்ளார். ஒரு ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டியளித்த அமித்ஷாவிடம், உத்தரப்பிரதேச தேர்தல் 80 சதவீதத்தினருக்கும், 20 சதவீதத்தினருக்குமானது என யோகி ஆதித்யாநாத் பேசியதுகுறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமித்ஷா, “இந்தத் தேர்தல் முஸ்லீம்களைப் பற்றியது என்றோ, யாதவர்களைப் பற்றியது என்றோ அல்லது இந்துக்களைப் பற்றியது என்றோ நான் நினைக்கவில்லை. யோகி வாக்கு சதவீதத்தைப் பற்றி பேசியிருக்கலாம். ஆனால் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் பற்றிப் பேசவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச தேர்தலில் பிளவுபடுத்துதல் நடக்கிறதா என்ற கேள்விக்கு அமித்ஷா ”ஆம்” எனப் பதிலளித்தார். இதுதொடர்பாக அவர், “ஆம் மக்கள் பிளவுபடுத்தப்படுகிறார்கள். ஏழைகளும் விவசாயிகளும் பிளவுபடுத்தப்படுகிறார்கள். என்னால் பிளவுபடுத்துதலைத் தெளிவாகக் காண முடிகிறது” எனக் கூறியுள்ளார்.