பா.ஜ.க மூத்த தலைவரான எடியூரப்பா, கர்நாடகா மாநிலத்தின், முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். இவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறப்படும் 17 வயது சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், ‘கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தனது மகளுடன், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கல்வி உதவித் தொகை தொடர்பாக சந்திக்க சென்றதாகவும், அப்போது தனது மகளை தனியாக அழைத்து சென்று எடியூரப்பா பாலியல் தொந்தரவு செய்ததாகவும்’ கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், பெங்களூர் சதாசிவ நகர் காவல்நிலையத்தில், எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், எடியூரப்பா மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, அவர் இன்று (15-03-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “என் மீது பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது தெரிய வந்தது. அவர்கள், ஒரு மாதமாக என் வீட்டிற்கு வருகை தந்திருக்கிறார்கள். நான் அதை கவனிக்கவில்லை. ஆனால், ஒரு நாள் எனது பணியாளர்கள் அந்த பெண் அழுகிறார் என்று சொன்னார்கள். அதை கேட்டதும், அப்பெண்னை அழைத்து என்ன நடந்தது? என்று கேட்டேன். அப்போது, தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக என்னிடம் கூறினார்கள்.
அதனால், இது தொடர்பாக நான் தனிப்பட்ட முறையில் போலீஸ் கமிஷனரை அழைத்து அப்பெண்ணுக்கு உதவுமாறு கூறினேன். ஆனால், அப்போதே அந்த பெண் என்னை எதிர்த்து பேச ஆரம்பித்தார். அந்த பெண்ணுக்கு உடம்பு சரியில்லை என்று நினைத்து போலீஸ் கமிஷனரை விசாரிக்கச் சொன்னேன். அவர்களுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்திருந்தேன். இப்போது, இதை திரித்து என் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு உதவி செய்தால் இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். இது ஒரு அரசியல் சதி என்று நான் நினைக்கவில்லை, ஒரு பெண் புகார் அளித்துள்ளார், நாங்கள் அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்” என்று கூறினார்