
ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அது தற்போது சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள முன்னுரையில், "பிரதமர் நரேந்திர மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி இருக்கிறார். முத்தலாக் சட்டம், 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற திட்டமும், பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்ததும் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும். இதுபோன்ற நரேந்திர மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும், நரேந்திர மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜாவின் இந்த முன்னுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று கூறி சமூக வலைதளங்களில் இளையராஜாவின் பேச்சுக்குப் பலரும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இதே போன்ற இளையராஜாவின் கருத்திற்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?
கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம்.விழித்துக்கொள் தமிழகமே!!!!" என்று குறிப்பிட்டுள்ளார்.