இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை மெல்ல ஓய்ந்து வருகிறது. இருப்பினும் மூன்றாவது அலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மத்திய அரசு கரோனாவை கையாளும் விதத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசு கரோனவை கையாண்ட விதம் குறித்த காங்கிரஸ் கட்சியின் வெள்ளை அறிக்கையை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.
வெள்ளை அறிக்கையை வெளியிட்ட ராகுல் காந்தி, இது மத்திய அரசை விமர்சிப்பதற்காக வெளியிடப்படவில்லை என்றும், மூன்றாவது அலைக்கு தயாராக உதவுவதற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதன் வெளியீட்டு நிகழ்வில் ஊடகங்களின் பல்வேறு கேள்விகளுக்கும் ராகுல் காந்தி பதிலளித்தார்.
ராகுல் காந்தி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், "இரண்டாவது அலையில் இறந்த 90 சதவீதம் பேர் காப்பாற்றப்பட்டிருக்கலாம். அவர்கள் இறந்ததற்கு மிகப்பெரிய காரணம் ஆக்சிஜன் பற்றாக்குறை. பிரதமரின் கண்ணீரால் குடும்பங்களின் கண்ணீரைத் துடைக்க முடியாது. அவருடைய கண்ணீரால் அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியாது. ஆனால் ஆக்சிஜனால் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் வங்கத்தின் (தேர்தல்கள்) மீது அவரது கவனம் இருந்ததால் அவர் மற்றவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" என விமர்சித்துள்ளார்.
கரோனாவால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தர முடியாது என மத்திய அரசின் அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி, பெட்ரோல் -டீசல் விலை உயர்வால் மத்திய அரசு 4 லட்சம் கோடி வருமானம் ஈட்டுவதாகவும், குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக இருந்தவர்களின் இழப்புக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கான காரணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, "வெள்ளை அறிக்கை கரோனா மூன்றாவது அலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான திட்டமிடல். கரோனா இரண்டாவது அலையைக் கையாளுவதில் என்னென்ன தவறுகள் நிகழ்ந்தன என்பது குறித்து அரசாங்கத்திற்கு தகவல்களையும், நுண்ணறிவையும் வழங்க வெளியிடப்படுகிறது. கரோனா மூன்றாவது அலை நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும். வெள்ளை அறிக்கையைத் தயாரித்தது குறைகளைச் சுட்டிக்காட்டவே. வருங்காலத்தில் இந்த குறைகள் களையப்படும் என நம்புகிறோம். மூன்றாவது அலைக்கு அரசு தயாராக இருக்க வேண்டும். அதுவே எங்கள் நோக்கம்" எனத் தெரிவித்தார்.
"கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள வேகமாக, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவேண்டும். போதுமான அளவு மருத்துவமனை படுக்கைகள் இருப்பதையும், போதுமான அளவு மருந்துகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ வளங்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு ஏழைகளுக்கு நேரடியாகப் பணம் வழங்கவேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். "கரோனா ஒரு பொருளாதார மற்றும் சமூக நோயாகும். நாங்கள் 'நியாய்' திட்டத்தை முன்மொழிந்தோம். பிரதமருக்கு அதன் பெயர் பிடிக்கவில்லை என்றால் அவர் மாற்றிக்கொள்ளலாம்.ஆனால், பணம் ஏழை மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம்" எனவும் கூறியுள்ளார்.