இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய அரசும் மாநிலங்களுக்கு தேவையான கரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் போன்றவைகளை விமானங்கள் மூலமும், ரயில்கள் மூலமும் அனுப்பி வைத்து வருகிறது.
அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மருத்துவ நிபுணர்கள், மத்திய அமைச்சகங்களின் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், டெல்லி, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளின் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (30/04/2021) காலை 11.00 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காணொளி மூலம் நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முக்கிய துறைகளின் அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஆக்சிஜன் தட்டுப்பாடு, கரோனா தடுப்பூசிகள், வெண்டிலேட்டர்கள், படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் குறித்தும் பிரதமர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, இன்றே அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.