இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்துக் கேள்விகள் எழுப்பியும், பிரதமர் கலந்துகொண்டு விவாதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவைகள் முடங்கியுள்ளன.
அதேபோல், தேசிய அளவில் பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணி அமைத்துள்ளன. அந்தக் கூட்டணிக்கு ‘இந்தியா’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்தே பாஜக தரப்பில் இருந்து ‘இந்தியா’ எனும் பெயர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று பாஜக எம்.பிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா எனும் பெயரை மோடி மறைமுகமாக விமர்சித்திருந்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய மோடி, “இந்தியத் தேசிய காங்கிரஸ், நாட்டை அடிமைப்படுத்திய கிழக்கு இந்தியக் கம்பெனி, பயங்கரவாத அமைப்பான இந்தியன் முஜாய்தீன், தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்பனவற்றில் இந்தியா எனும் பெயர் உள்ளது. பெயரில் இந்தியா என்ற வார்த்தையைக் கொண்டு வருவதால் எதுவும் நடக்காது. மக்கள் ஒரு போதும் தவறாக வழிநடத்தப்படமாட்டார்கள்” என்று தெரிவித்ததாக ரமேஷ் பிதுரி எம்.பி தெரிவித்திருந்தார்.
இது தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், பிரதமர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. அதில், பிரதமர் மோடி வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். ராஜஸ்தானின் சிகாரில் பி.எம்.கிஸான் திட்டத்தின் கீழ் 14 ஆவது தவணைத் தொகையான சுமார் 17,000 கோடியை விடுவிப்பது உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, குஜராத் ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தைப் பிரதமர் திறந்து வைப்பார். மேலும், 860 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். இதையடுத்து, ஜூலை 28 ஆம் தேதி, காந்தி நகரில் செமிகான் இந்தியா 2023-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.