இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, மக்களவையில் நேற்று முன்தினம் (05-02-24) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்வினையாற்றினர்.
இந்த நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி இன்று (07-02-24) மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். அதில், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். இதனிடையே, சில நாட்களுக்கு முன் தனி நாடு தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடகா எம்.பி. டி.கே.சுரேஷ் பேசியது குறித்து மோடி விமர்சனம் செய்துள்ளார்.
அதில் அவர், “தேசம் என்பது நமக்கு வெறும் நிலம் மட்டுமல்ல. நம் அனைவருக்கும் இது ஒரு உத்வேகம் தரும் அலகு. உடலின் ஒரு உறுப்பு செயல்படவில்லை என்றால் முழு உடலும் ஊனமாக கருதப்படுகிறது. அதேபோல், நாட்டின் ஒரு மூலையில் வளர்ச்சியில்லாமல் இருந்தால் நாடு வளர்ச்சி அடையாது. இன்று பேசப்படும் மொழி, நாட்டை உடைக்க அரசியல் சுயநலத்திற்காக புதிய கதைகள் கட்டமைக்கப்படுகின்றன. நாட்டுக்கு இதைவிட பெரிய துரதிர்ஷ்டம் என்ன இருக்க முடியும்? ஒரு தேசியக் கட்சியிலிருந்து இப்படிப்பட்ட எண்ணம் வெளிவருகிறது என்றால் துரதிர்ஷ்டம் தான். நமது வரி, நமது பணம் என்பது என்ன மாதிரியான கருத்து இது? இது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது” என்று கூறினார்.
முன்னதாக, இடைக்கால பட்ஜெட் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கர்நாடகா காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷ், “மத்திய அரசு, தென் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகளில் சரியான முறையில் பங்கை வழங்குவதில்லை. தென் மாநிலங்கள் அநீதியை சந்தித்து வருகின்றன. தென் மாநிலங்களில் இருந்து பணத்தை வசூலித்து வட மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், தனி நாடு கோரும் நிலைக்குத் தள்ளப்படுவோம். 4 லட்சம் கோடிக்கு மேல் எங்களிடம் இருந்து மத்திய அரசு பெறுகிறது. ஆனால், அதற்கு ஈடாக நாம் பெறுவது மிகவும் சொற்பம் தான். இதை நாம் கேள்வி கேட்க வேண்டும். இதை சரி செய்யாவிட்டால் அனைத்து தென் மாநிலங்களும் தனி நாடு கோரி குரல் எழுப்ப வேண்டும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.