“மொழியின் பெயரால் அரசியல் செய்வதை இளைஞர்கள் விரும்பவில்லை” என புதுவை அரவிந்தர் விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியத் தேசியவாதியும் மெய்யியலாளரும் ஆன்மிகத் தலைவருமான கவிஞர் அரவிந்தரின் 150 ஆவது பிறந்தநாள் விழா புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆரோவில் நிர்வாகக்குழு தலைவரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி, நிர்வாகக்குழு உறுப்பினரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் அரவிந்தரின் உருவப்படம் பொறித்த நாணயம் மற்றும் தபால் தலையினை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளிக்காட்சி மூலமாக வெளியிட்டார். அது விழா நடைபெறும் கம்பன் கலையரங்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “உலகிற்கே இந்தியா தலைமை தாங்க வேண்டும் என்று அரவிந்தர் நினைத்தார். அவர் நினைத்தபடி ஜி20 நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளது. அதனால் அவருக்கு தபால் தலை வெளியிடப்படுகின்றது. மேலும், எல்லோரும் நாணயமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுகின்றது. தாய்மொழிக் கல்விதான் வேண்டும் என்று அரவிந்தர் நினைத்தார். அதனால் தான் புதிய கல்விக்கொள்கையை பிரதமர் கொண்டு வந்தார். அவரது பெருமையைப் போற்ற வேண்டும்” எனப் புகழாரம் செய்தார்.
முதல்வர் ரங்கசாமி பேசும்போது, “புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அரவிந்தருக்கு தபால் தலையும், அவரது உருவம் பொறித்த நாணயமும் வெளியிடுவது மகிழ்ச்சிக்குரியது. இந்தியா உலக அளவில் தலைநிமிர்ந்து நிற்கின்றது. ஜி20 நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்றிருப்பது பிரதமர் மோடியின் ஆன்மீக பலத்தைக் காட்டியது. உலகம் முழுவதிலிருந்து புதுச்சேரிக்கு சுற்றுலாவினர் வருகின்றனர். அரவிந்தரின் ஆசிரமம் இங்கு இருப்பது தான் அதன் சிறப்பு. ஆன்மீகம்தான் நாட்டையும் மாநிலத்தையும் உயர்த்திப் பிடிக்கும்” எனக் கூறினார்.
அரவிந்தரின் தபால் தலை மற்றும் அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி பேசும்போது, “தேசத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினமாக இந்தத் தினத்தை இந்தியத் தேசத்தில் வாழ்கிற நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்த வரிசையில் புதுச்சேரி மண்ணில் குறிப்பாக அரவிந்தரின் நினைவைப் போற்றுகிற விதத்தில் ஒரு நினைவு நாணயமும் அஞ்சல் தலையையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு புதிய உணர்வை; சக்தியை இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் கொடுக்கும். அரவிந்தரின் யோக சக்தி என்பது ஒரு சமூக சக்தி என்பது மட்டுமல்ல, அது அனைவரையும் இணைக்கும் சக்தியாகும். சில தினங்களுக்கு முன்பு காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு அமைந்தது. அந்தக் காசி தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் இன்றைய இளைஞர்கள்; தமிழ் இளைஞர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. மொழியின் பெயரால் அரசியல் செய்வதை இளைஞர்கள் விரும்பவில்லை.
அரவிந்தர் ஒரு தனித்துவமிக்க அரசியல் ஞானியாகவும் ஆன்மீக சக்தியாகவும் விளங்கினார். தேசத்தின் விடுதலைக்காக அவர் பாடுபட்டதோடு மட்டுமல்ல, ஆன்மீக சக்தியையும் மேலே கொண்டுவர வேண்டும் என்று விரும்பி ஆன்மீக சக்தியின் உறுதியான நிலையை, சுதந்திர வேட்கையை உருவாக்கி இந்தியாவைத் தலை நிமிரச் செய்தார். மனிதனிலிருந்து இறைவன் வரை நாம் ஒருவரைப் போற்றுகிறோம் என்று சொன்னால், அவருடைய செயல்பாடுகளே காரணமாகும். இன்றைய பாரத இளைஞர்கள் அரவிந்தரின் சக்தியை உணர்ந்து இன்றைய பாரதத்தினுடைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அந்த உணர்வுகளை தாங்கி நாம் இந்தியாவில் உள்ள சவால்களை எதிர்கொள்வோம்” என்றார்.