நாடு முழுவதும் கடந்த 16 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், ஹரியானா மாநிலத்தின் குருகிராமைச் சேர்த்த 56 வயதான செவிலியர் ஒருவர், 7 நாட்களுக்கு முன்பு கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டநிலையில், நேற்று காலை 6 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது கணவர், தனது மனைவியின் மரணம் குறித்து காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். புகாரில், மனைவி கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், குருகிராமின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் வீரேந்தர் யாதவ், "இந்த மரணத்திற்குக் காரணமாக தடுப்பூசியைக் கூறுவதற்கும், அதனைத் தடுப்பூசியுடன் தொடர்பு படுத்துவதற்கும் இதுவரை எந்த முகாந்திரமும் இல்லை" எனக் கூறியுள்ளதோடு, மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நான்கு முன்களப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் இதயம் சம்பந்தமான பாதிப்பால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.