ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.
ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அமைத்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் ‘மோடியின் குடும்பம்’ என்று வைத்திருப்பவர்கள் அதனை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, பீகாரின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்று விமர்சித்திருந்தார். அதற்கு, இந்தியாவே எனது குடும்பம் என்று பிரதமர் மோடி பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் சமூக வலைதளங்களில் அவர்களது பெயருக்குப் பின்னால் ‘மோடியின் குடும்பம்’(மோடி கா பரிவார்) என்று மாற்றம் செய்துகொண்டனர். இந்த நிலையில்தான் பிரதமர் மோடி, ‘மோடியின் குடும்பம்’ என்பதை நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இந்தியா முழுவதும் இருக்கும் மக்கள் அனைவரும் என் மீதான பாசத்தின் காரணமாக சமூக வலைதள கணக்குக்குகளுக்கு பின் ‘மோடியின் குடும்பம்’ என்று சேர்ந்தனர். அதிலிருந்து நான் நிறைய பலன் பெற்றேன். நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை மக்கள் நமக்கு வழங்கியுள்ளனர். நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்ற செய்தி திறம்படத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது, ‘மோடியின் குடும்பம்’ என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பெயர்கள் மாறலாம்; ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் நாம் எப்போதும் ஒரே குடும்பம் என்ற வலிமையான உறவு அப்படியே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.