கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், இந்திய பிரதமர் மோடியும் நேற்று (10.02.2021) தொலைபேசி வாயிலாக உரையாடினர். அப்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவிற்கு இந்தியா, கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்திய பிரதமர் மோடியும், கனடாவிற்கு கரோனா தடுப்பூசி வழங்க ஒத்துக்கொண்டார்.
இதுதொடர்பாக இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், தனது நண்பர் ஜஸ்டின் ட்ரூடோவிடமிருந்து அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும், கனடா நாட்டிற்கு தடுப்பூசி வழங்க, இந்தியா தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்யும் என உறுதியளித்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இருநாட்டு பிரதமர்கள் உரையாடியது குறித்து, இரு நாடுகளும் தனித்தனியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடா பிரதமர் இந்திய பிரதமரிடம், இந்தியாவின் தடுப்பூசிகள் குறித்து கனடாவின் தேவையை வலியுறுத்தியதாகவும், இந்திய பிரதமரும், இந்தியா அதற்கான முயற்சிகளை செய்யும் என உறுதியளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் பல முக்கியமான புவிசார் அரசியல் பிரச்சினைகள் குறித்து இந்தியாவும் கனடாவும் பகிர்ந்துகொண்ட பொதுவான பார்வைகளை மீண்டும் வலியுறுத்திக்கொண்டனர். காலநிலை மாற்றம் மற்றும் கரோனா தொற்றுநோயின் பொருளாதார தாக்கம் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்த்துப் போராடுவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடர ஒப்புக்கொண்டனர் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு குறித்து கனடா நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தடுப்பூசி பெறுவதில் இணைந்து செயல்பட இருநாட்டு தலைவர்களும் ஒத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய சவால்களில் இணைந்து செயல்படுதலின் முக்கியத்துவம் ஆகியவற்றை மீள் உறுதி செய்துகொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மைகால போராட்டங்கள், பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து இருநாட்டு தலைவர்களும் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் அறிக்கையில் போராட்டங்கள் குறித்துப் பேசியதாக கூறப்படவில்லை. இதனால் ஜஸ்டின் ட்ரூடோ, விவசாயிகள் போராட்டம் குறித்து பேசினாரா என்றும், அதனை மத்திய அரசு மறைக்கிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. சமூகவலைதளங்களிலும் இதுதொடர்பான விவாதம் எழுந்துள்ளது.