இந்திய பாரளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இதனையடுத்து இன்று காலை பேட்டியளித்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற அவை தலைவர்களுடனான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இதுகுறித்து பிரதமர் மோடி, "நாளை மாலை அவைத் தலைவர்களுக்கு நேரமிருந்தால், கரோனா பெருந்தொற்று தொடர்பாக விரிவான தகவல்களை வழங்க விரும்புகிறேன். பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், அவைத்தலைவர்களுடன் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் விவாதம் நடைபெறுவதை விரும்புகிறோம்" என கூறியிருந்தார்.
இந்தநிலையில் பிரதமர் மற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அவைத்தலைவர்கள் இடையேயான கூட்டம் உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் கரோனா தடுப்பூசி திட்டம் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகவும், கரோனாவை கையாண்ட விதம் குறித்து நாடாளுமன்ற அவைத்தலைவர்களுக்கு பிரதமர் விளக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே இன்று, எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்படாமல், ஒத்திவைக்கப்பட்டு கொண்டிருந்தன. இறுதியில் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாளை காலை 11 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.