உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் தலைநகரான கீவ் நகருக்குள் ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாமல் உக்ரைன் மக்கள் அரணாக நிற்பதால் மற்றொரு நகரமான ரஷ்ய எல்லையில் உள்ள கார்கீவ் நகர் மீது தாக்குதலை தொடுத்துள்ளனர். அங்கேயும் மக்கள் அரணாக உள்ளனர். இந்த நிலையில் தான் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.
எங்கள் மீது குண்டு மழை பொழிய இடம் கொடுத்த பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று உக்ரைன் அதிபர் பதில் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து பெலாரஸில் இருந்து தாக்குவதை பெலாரஸ் அதிபர் நிறுத்த கூறியுள்ளார். இதன் பிறகு பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற நிலை உள்ளது. மற்றொரு பக்கம் கீவ், மற்றும் கார்க்கிவ் நகரங்களில் மருத்துவம் படிக்க இந்தியாவில் இருந்து சென்ற மாணவர்கள் ரொம்பவே தவித்து வருகின்றனர்.
நான் அவர்களிடம் பேசும் போதே "குண்டுச் சத்தம் கேக்குதண்ணா" என்கிற மாணவர்கள் நாளுக்கு நாள் உணவு, தண்ணீர் கூட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு தான் இவையெல்லாம் கிடைக்கும் போலிருக்கிறது. எப்படியாவது எங்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாங்கள் தைரியமாக இருந்தாலும் ஊரில் உள்ள எங்கள் பெற்றோர் உணவு, உறக்கமின்றி தவிக்கிறார்கள்.
இந்திய அரசும், தமிழக அரசும் எங்களை பத்திரமாக அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையோட காத்திருக்கிறோம் என்றனர். அதே கீவ் பகுதியில் அடித்தளங்களில் தங்கியுள்ள இந்திய மாணவர்கள் ப்ளீஸ் ஹெல்ப் என்ற பதாகையை ஏந்தி நிற்கிறார்கள். அத்தனை பேரும் தங்கள் உடைமைகளை வைக்கக் கூட இடமின்றி அந்த இடங்களிலேயே இரவு, பகலாக குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.