டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா இதுவரை ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது. மீராபாய் சானு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றுள்ளார். பி.வி. சிந்து பேட்மிண்டனில் வெண்கலமும், ரவிக்குமார் தஹியா மல்யுத்த போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.
மேலும், இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் வெண்கலம் வென்றுள்ளது. இதற்கிடையே, காலிறுதிக்குக் கூட தகுதி பெறாது என கணிக்கப்பட்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி, அரையிறுதிவரை முன்னேறி சாதித்ததோடு, ரசிகர்களின் இதயங்களையும் வென்றது.
இதனையடுத்து, மகளிர் ஹாக்கி அணிக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. இந்தநிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த அம்மாநில வீராங்கனைகளுக்குத் தலா 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும், வீராங்கனைகளின் பழைய வீடுகள், செங்கல் மற்றும் சிமெண்ட் கொண்டு கட்டப்படும் நிரந்தர வீடுகளாக மாற்றப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், இந்திய அணி அரையிறுதிவரை செல்ல முக்கிய பங்காற்றிய வந்தனா கட்டாரியாவிற்கு, 25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.