Skip to main content

'கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு' - வேதனையின் உச்சத்தில் பினராயி விஜயன்

Published on 30/07/2024 | Edited on 30/07/2024
nn

தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் இன்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதேபோல் கேரள மாநிலம் மூணாறில் இருந்து கொச்சி மற்றும் தேனி செல்லும் சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து மதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக மூணாறு லக்கம் நீர்வீழ்ச்சி பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மூணாறில் இருந்து உடுமலை செல்லக்கூடிய சாலை, மூணாறில் இருந்து தேனி, கொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலைகளின் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் முழுமையாக சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் நிலச்சரிவு சம்பவங்கள் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் வயநாடு முண்டக்கை நிலச்சரிவு பகுதியில் மீட்புப் பணிகள் மிகவும் சவாலாக உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

nn

மீட்புப் பணிகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ''கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது. விமானப்படையின் இரண்டு விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். நிலச்சரிவு விபத்தில் இதுவரை 93 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 128 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். திடீரென்று பொழிந்த அதி கனமழை காரணமாகவே இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  48 மணி நேரத்தில் 572 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மீட்புப் பணிகள் மிகவும் சவால் நிறைந்த ஒன்றாக உள்ளது.

மண்ணில் புதைந்தும், எரிந்தும் ஆறு மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளது. இதனால் 350 வீடுகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு மருத்துவ குழுக்கள் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு சென்றுள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியது அவசியம். அரசின் மீட்பு நடவடிக்கைகள் முழுமையடைய பாதிக்கப்பட்ட மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' எனதெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்