கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர முதுகலை பட்டப்படிப்பு படித்திருப்பதுடன், மாநில அளவிலான செட் தேர்விலோ அல்லது தேசிய அளவிலான நெட் தேர்விலோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். இந்தநிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு, உதவி பேராசிரியர் பணியில் சேர பிஎச்.டி. கட்டாயம் என மத்திய அரசு புதிய விதிமுறையைக் கொண்டுவந்தது.
மேலும், இந்தப் புதிய விதிமுறை இந்த ஆண்டு ஜூன் 1 முதல் அமலாகும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்தநிலையில், இந்த விதிமுறையை அமல்படுத்துவதை 2023 ஆண்டு ஜூலை மாதம்வரை நிறுத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனைப் பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
கரோனா சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு தனது கடிதத்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் 2023ஆம் ஆண்டு ஜூலை வரை பி.எச்.டி. முடிக்காதவர்களும் உதவி பேராசிரியர்கள் ஆக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.