ஜி.எஸ்.டி.க்கு கீழ் வரும் பெட்ரோலியப்பொருட்கள்? - தர்மேந்திர பிரதான் தகவல்
பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி.க்கு கீழ் கொண்டுவருவதன் மூலம் பொதுமக்களுக்கு பயன்தர முடியும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
அமிர்தசரஸில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘பெட்ரோலியப் பொருட்களின் விலை சீரான நிலைமைக்கு மாறிக்கொண்டிருக்கிறது. மத்திய மாநில அரசுகளின் உதவியோடு பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி.க்கு கீழ் கொண்டுவர இருக்கிறோம். இதன் மூலம் பொதுமக்கள் பயன்பெற முடியும். இந்த பணியை ஜி.எஸ்.டி. கவுன்சில் மேற்கொள்ளவுள்ளது.
ஜி.எஸ்.டி. நம் தேசத்திற்கு கோலாகலமான திருவிழாவைப் போன்றது. இது மத்திய மாநில அரசுகள், மற்றும் பொதுமக்களின் அறிவுரைகள் மற்றும் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு கட்டமைக்கப்பட்டது. ஒரு திட்டம் அறிமுகமாகும்போது சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். காலப்போக்கில் எல்லாம் சீராக மாறிவிடும். தொழில்துறையின் மத்தியில் ஜி.எஸ்.டி.க்கான ஆதரவு நாளுக்குநாள் பெருகி வருகிறது. பிரதமர் மோடி ஊழலுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார். அது ராவணனை வீழ்த்துவதற்கு சமமானது. தேசம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அது மேலும் முன்னேறும்’ என தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்