இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. பெட்ரோல் விலை 100-ஐ நெருங்குவதால், பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்தநிலையில் மஹாராஷ்டிராவில் சதமடித்துள்ளது பெட்ரோல் விலை. அம்மாநிலத்தின் பர்பானி மாவட்டத்தில், துணைப்பொருட்களுடன் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்துள்ளது. அதேபோல், மத்திய பிரதேசத்தின் போபாலில், பிரீமியம் பெட்ரோல் நூறு ரூபாயைத் தொட்டுள்ளது. இதனால், இரண்டு இலக்கத்தில் மட்டுமே விலைக்காட்டும் வசதியை வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் பெட்ரோல் விலை 99.29 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 95.21 ரூபாய்க்கும், சென்னையில் பெட்ரோல் விலை 90.96 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
அதேநேரம், பாஜக ஆளும் அஸாம் மாநிலத்தில் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட 5 ரூபாய் கூடுதல் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் கரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது விதிக்கப்பட்ட இந்த கூடுதல் வரி, அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.