பெட்ரோல், டீசல் விற்பனையில் மாநில அரசுகளுக்கு ஏற்கனவே மிகக் குறைவான வரி வருவாய் கிடைப்பதாகவும், அதையும் குறைத்துக் கொள்ள மத்திய அரசு கூறுவது வியப்பளிப்பதாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதியையும், மானியங்களையும் மத்திய அரசு அளிக்க வேண்டும்; இல்லாவிட்டால் பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசுகள் வரியைக் குறைப்பது சாத்தியமில்லை என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பெட்ரோல், டீசல் வரிக் குறைப்பால் ஏற்படும் நிதிச்சுமையில் மாநில அரசுகளுக்கும் பங்கு இருக்கிறது என்ற தனது கருத்தை திருத்திக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்ததாலேயே மாநில அரசுகளுக்கும் இதில் பங்கு உண்டு என்று தான் பதிவிட்டு இருந்ததாகவும், ஆனால், உண்மையில் கூடுதல் கலால் வரி தான் குறைப்பட்டிருப்பதாகவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
கலால் வரி வருவாயில் ஒரு பங்கு தான் மாநில அரசுகளுக்கு தரப்படுவதாகவும், கூடுதல் கலால் வரி வருவாய் முழுவதும் மத்திய அரசுக்கே செல்வதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.