நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டமாக 430 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மொத்தம் 21 தொகுதிகள் கொண்ட ஒடிசா மாநிலத்தில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், ஒடிசாவில் நேற்று முன்தினம் (20-05-24) பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசிய போது, “ஒடிசாவில் ஒரு மாஃபியா எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது. மேலும், யாரையும் போட்டியிட அனுமதிக்கவில்லை. ஜூன் 10ஆம் தேதி பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், அதன் முதுகெலும்பு உடைந்து விடும். நமது வீடுகளின் சாவிகள் தொலைந்து போனால், ஜெகநாதரைப் பிரார்த்தனை செய்து, இறைவனின் ஆசீர்வாதத்துடன் ஓரிரு மணி நேரத்தில் அவற்றைக் கண்டுபிடித்து விடுவோம். ஆனால் பகவான் ஜகன்னாத ரத்ன பண்டரின் சாவிகள் காணாமல் போய் ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. ரத்ன பண்டரின் சாவி காணாமல் போனது தொடர்பான விசாரணை கமிஷன் அறிக்கை, சாவிகள் தமிழகத்திற்கு சென்று விட்டதால், ஆறு ஆண்டுகளாக அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கை என்ன ஆனது என்பதை ஒடிசா முழுவதும் அறிய விரும்புகிறது. பி.ஜே.டியின் மௌனம் மீது சந்தேகம் வலுக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததும், முழு உண்மையும் வெளிவரும் என்றும், அறிக்கையை வெளியிடுவோம் என்றும் மக்களுக்கு உறுதியளிக்கிறேன். ஜெகந்நாதருக்கு நாம் செய்யும் சேவை இந்தப் பணியிலிருந்து தொடங்கும். நீங்கள் பி.ஜே.டிக்கு 25 ஆண்டுகள் கொடுத்தீர்கள். அதன் முடிவுகள் உங்களுக்குத் தெரியும். ஜூன் 10ஆம் தேதி ஒடிசாவில் இரட்டை எஞ்சின் அரசாங்கம் பதவியேற்கவுள்ளது. இந்த அரசு செல்ல வேண்டும். பி.ஜே.டி வழிவகுத்தது, இப்போது அவர் செல்ல வேண்டிய நேரம் இது” என்று கூறி கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்.
பூரி ஜெகன்நாதரின் சாவி தமிழகத்திற்கு சென்றுவிட்டதாக கூறிய பிரதமர் மோடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தை ஆட்சி செய்யும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன், பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வி.கே.பாண்டியன் கூறுகையில், “பிரதமருக்கு அவ்வளவு அறிவு இருந்தால் சாவி எங்கே போனது என்று கண்டுபிடித்து தர வேண்டும். பிரதமரிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அவருக்கு கீழ் பல அதிகாரிகள் உள்ளனர், அவருக்கு ஓரளவு அறிவு இருக்கும். அவர்கள் ஒடிசா மக்களை அறிவூட்ட முடியும். எனவே சாவிகள் எங்கே என்று அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறினார்.