Skip to main content

பாரத் பையோடெக் நிறுவனத்துக்கு எதிராக மருந்து கட்டுப்பாட்டாளருக்கு பீட்டா அமைப்பு கடிதம்!

Published on 18/06/2021 | Edited on 18/06/2021

 

covaxin

 

இந்தியாவில் செலுத்தப்படும் கரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் தடுப்பூசியைப் பாரத் பையோடெக் நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்தநிலையில், கோவாக்சின் தடுப்பூசியில் புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து மத்திய அரசும், பாரத் பையோடெக் நிறுவனமும் தனித்தனியாக விளக்கமளித்தன.

 

வெரோ செல் (vero cell) உற்பத்தியில் மட்டுமே கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்தப்படுவதாகவும், கோவாக்சின் தடுப்பூசியின் இறுதி வடிவத்தில் கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்துவதில்லை என அந்த விளக்கங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பில், கன்றுக்குட்டியின் சீரத்தைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக வேறு வேதிப்பொருட்களைப் பயன்படுத்த, பாரத் பையோடெக் நிறுவனத்திற்கு அறிவுறுத்துமாறு பீட்டா அமைப்பு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.

 

இந்தக் கடிதம் குறித்து பீட்டா இந்தியாவின் அறிவியல் கொள்கை ஆலோசகர் டாக்டர் அங்கிதா பாண்டே கூறுகையில், "சீரம் எடுக்கப்படும் கன்றுகள் பிறந்த சிறிது நேரத்திலேயே தங்கள் தாய்மார்களிடமிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன, இது தாய் மற்றும் கன்றுகளுக்கு அதிர்ச்சியையும் துன்பத்தையும் தருகிறது" என தெரிவித்துள்ளார். மேலும், “தடுப்பூசி தயாரிப்பாளர்கள், தங்கள் தடுப்பூசிகளில் விலங்குகளிடமிருந்து எடுக்கப்படும் பொருட்களைத் தவிர்த்து மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரை வலியுறுத்தியுள்ளோம்" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்