கொடுத்த கடனை திரும்பக் கேட்டதற்காக கடன் வாங்கியவர் யூடியூப்பை பார்த்து குண்டு தயாரித்து வீட்டில் எறிந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிச்ரோல் பகுதியைச் சேர்ந்த ரன்வீர் என்ற நபர் பக்கத்து வீட்டில் வசிக்கும் காமேஷ் என்பவரிடம் 4 லட்சம் ரூபாய் கடனாக பெற்ற நிலையில் காமேஷ், தான் கொடுத்த கடனை திரும்பத் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து காமேஷ் பணத்தை தருமாறு கேட்டதால் ஆத்திரமடைந்த ரன்வீர் அவர் வீட்டில் வெடிகுண்டு வீசி அவர்களை கொல்ல திட்டமிட்டு வெடிகுண்டை காமேஷின் வீட்டு கேட்டில் கட்டியுள்ளார். வெடிகுண்டு வெடித்துச் சிதறியதால் காமேஷின் மகன் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி ரன்வீரை கைது செய்தனர். 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள ரன்வீர் யூடியூப்பை பார்த்து வெடிகுண்டு எப்படி தயாரிக்க வேண்டும் என கற்றுக் கொண்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த நிலையில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.