Skip to main content

ஆடியோ சர்ச்சைக்குப் பின் வெள்ள நிவாரணம்... புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுவையில் அனுமதி!

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

'' Permission for New Year celebration ... '' -Rangasamy's announcement!

 

புதுச்சேரியில் வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்வை அம்மாநில முதல்வர் ரங்கசாமி துவங்கிவைத்துள்ளார்.

 

அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பியதோடு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதன் காரணமாக அரசு சார்பில் வெள்ள சேத நிவாரணங்களும் அறிவிக்கப்பட்டிருந்தது. புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

 

ஆனால் நிவாரணத் தொகை வழங்கப்படாத நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்த காரைக்காலைச் சேர்ந்த நபர் ஒருவர், “வெள்ள சேத நிவாரணம் எப்போது வரும்” எனக் கேட்டுள்ளார். அதற்கு ரங்கசாமி பதிலளிப்பதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், ''ஐயா நிவாரண நிதி போடறதா சொல்லியிருந்தீங்க. இதுவர வரவேயில்லை ஐயா...'' என கேட்க, ''அது, நான் மட்டும் ராஜாவா இருந்தா பரவாயில்லப்பா... நான் ராஜா கிடையாது... மந்திரிங்க எல்லாம் இருக்காங்க... எனக்கு மேல இருக்காங்க... கீழ இருக்காங்க... இது பாண்டிசேரி, அப்படித்தான் இருக்கும்'' என பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் புதுச்சேரியில் கனமழை, வெள்ள காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வை அம்மாநில முதல்வர் ரங்கசாமி துவங்கிவைத்துள்ளார். சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 5,000 ரூபாயும், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு 4,500 ரூபாயும் நிவாரணம் வழங்கப்பட்டுவருகிறது. அதேபோல், ஜனவரி ஒன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் கரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வழிகாட்டு நெறிமுறைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட அனுமதி அளித்துள்ளார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.

 

 

சார்ந்த செய்திகள்