
புதுச்சேரியில் உயிரிழந்த லட்சுமி யானைக்கு 3 அடி உயர சிலை அமைத்து, "புதுவையின் செல்ல மகள்" என பெயர்சூட்டி பக்தர்கள் பூஜைகள் செய்தனர்.
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலின் யானை லட்சுமி நேற்று முன்தினம் காலை நடைப்பயிற்சியின் போது காமாட்சியம்மன் கோயில் தெருவில் மயங்கி விழுந்து உயிரிழந்தது. புதுச்சேரி மக்களின் அன்பை பெற்ற லட்சுமி யானை உயிரிழந்தது புதுச்சேரி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யானை லட்சுமியை அடக்கம் செய்த இடத்திலும், யானை உயிரை விட்ட காமாட்சியம்மன் கோயில் வீதியிலும் பொதுமக்களும், பக்தர்களும் விளக்கேற்றி வைத்து பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் யானை லட்சுமி உயிரிழந்த இடத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காமாட்சியம்மன் கோயில் வீதியில் "புதுவையின் செல்ல மகள்" எனப் பெயரிடப்பட்ட 3 அடி உயர யானையின் சிலையினை அமைத்து வழிபாடு செய்தனர்.
இதேபோல் பக்தர்கள் ஏற்பாட்டின் படி நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.