Skip to main content

“மக்கள் ஒற்றுமையே இந்தியா கூட்டணியின் பலம்” - ராகுல் காந்தி எம்.பி.

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

People unity is the strength of the India alliance Rahul Gandhi MP

 

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றன. அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2 ஆவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது.

 

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மூன்றாவது இரண்டு நாள் கூட்டம் நேற்று தொடங்கியது. நேற்று மும்பையில் நடந்த கூட்டத்தில் 28 கட்சிகளைச் சேர்ந்த 65 தலைவர்கள் கலந்து கொண்டனர். இன்று இரண்டாவது நாள் கூட்டம் தொடங்கிய நிலையில், பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கூட்டணி கட்சி தலைவர்களிடையே நல்ல புரிந்துணர்வையும், நட்புணர்வையும் இந்தக் கூட்டங்கள் ஏற்படுத்தியுள்ளன. கருத்து வேறுபாடுகளை களைந்து சிறந்த புரிதலோடு தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். சுமூகமான முறையில் தொகுதிப் பங்கீட்டை நடத்தி முடிப்போம். வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி பாஜகவை நிச்சயமாக வீழ்த்தும். ஏழை மக்களிடம் இருந்து பணத்தை பறித்து குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்கு வழங்குவதே மோடி அரசின் இலக்கு. ஏழைகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும். மக்கள் ஒற்றுமையே இந்தியா கூட்டணியின் பலம்" என தெரிவித்தார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்