பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து என். ராம் உள்ளிட்ட பத்திரிகை ஆசிரியர்கள் சார்பில் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பல மனுக்கள் போடப்பட்டுள்ளன.
ஃபோன்கள் ஒட்டுக்கேட்புக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி ரமணா மற்றும் நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய முதல் அமர்வு முன்பு இன்று (05/08/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், "தொழில்நுட்பம் மூலம் தனிநபர் ரகசியத்தை வேவு பார்ப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது. 'NSO' நிறுவனம், உளவு பார்க்கக் கூடிய தகவல்களை ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு மட்டுமே வழங்கும். பெகாசஸ் தொழில்நுட்பம் ஊறு விளைவிக்கக் கூடியது; சட்ட விரோதமானது. நமக்குத் தெரியாமலேயே நம் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை உளவுப் பார்க்கக் கூடியது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உளவு பார்க்கப்பட்டாலும், அதுகுறித்த விவரம் தற்போதுதான் வெளியாகியுள்ளது. அதனால்தான் இத்தனை நாட்கள் யாரும் புகார் எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர்" என வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி, "உளவு பார்க்கப்பட்டதாகச் சொல்பவர்கள் யாரும் இதுவரை ஏன் புகார் அளிக்கவில்லை? 2019ஆம் ஆண்டு முதல் ஒட்டுக்கேட்பு விவகாரம் வெளிவந்ததாகக் கூறப்படும்போது, தற்போது அவசரமாக கையாளுவது ஏன்? பெரும்பாலும் பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பத்திரிகை செய்திகளின் தன்மையை ஆராய்ந்த பிறகே விசாரணைக் குழு அமைக்க முடியும். பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தன என்பதில் சந்தேகமில்லை" என கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10- ஆம் தேதி அன்று ஒத்திவைத்து உத்தரவிட்டார் .