2016ஆம் ஆண்டு இறுதியில், 39 வயதான நபர் ஒருவர் சிறுமி ஒருவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றுள்ளார். இதையடுத்து, அந்தச் சிறுமியின் தாயார் இதுதொடர்பாக காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். அதன்பிறகு இந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு போக்சோ சட்டத்தின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் 354ன் கீழும் (பெண்ணுடைய அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல்) தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து அந்த நபர் மேல்முறையீடு செய்ய, மேல்முறையீட்டை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை, ஆடைகளோடு குழந்தைகளின் உடலைத் தொடுவது பாலியல் துன்புறுத்தலில் வராது. அது இந்திய தண்டனைச் சட்டம் 354ன் கீழ்தான் வரும் என இந்த ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், தேசிய மகளிர் ஆணையம், மஹாராஷ்ட்ரா அரசு ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்தநிலையில், இந்த மேல்முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றம் இன்று (18.11.2021) தனது தீர்ப்பினை வழங்கியுள்ளது.
ஆடைகளோடு குழந்தைகளின் உடலைத் தொடுவது பாலியல் துன்புறுத்தலில் வராது என்ற மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. தொடுதல் என்பதை தோலோடு தோல் படுவது என சுருக்குவது போக்சோ சட்டம் தொடர்பான குறுகிய மற்றும் அபத்தமான விளக்கத்திற்கு வழிவகுக்கும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், "பாலியல் நோக்கத்துடன் ஆடைகள் வழியாக தொடுவது போக்சோ வரையறையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தெளிவான வார்த்தைகளில் தெளிவின்மையைத் தேடுவதில் நீதிமன்றங்கள் அதீத ஆர்வம் காட்டக் கூடாது" எனவும் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், விதிகளின் நோக்கத்தை முறியடிக்கும் குறுகிய விளக்கத்தை அனுமதிக்க முடியாது எனவும் கூறியுள்ளது.