கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு இன்று (மே 10, 2023) தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ளன.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் கல்புர்கி நகரில் நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகிகளை மாவட்ட ஆட்சியர் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சங்கமேஸ் காலனி என்ற பகுதியில் பாஜகவை சேர்ந்த சிலர் இரண்டு கார்களில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் கொடுக்கப்பட்டது.
உடனடியாக மாவட்ட ஆட்சியர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்பொழுது அங்கிருந்த பாஜகவினர் தப்பித்துச் செல்ல முயன்றனர். அவர்களைத் துரத்திச் சென்று பிடித்த மாவட்ட ஆட்சியர், ஒரு காரை மட்டும் கைப்பற்றினார். அதில் ஏராளமான மது பாட்டில்கள், பாஜகவின் பதாகைகள் இருந்தன. காரில் இருந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.